சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பக்கம் உள்ள பெரும்பத்து என்ற ஊரில் வசித்துவந்த நிலச்சுவான்தாரான வீரகுமார சுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் நாங்குநேரியில் ஒரு பெண்ணை இந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சீரழித்து விட்டார். அந்த பெண் அவமானம் தாங்காமல் வைக்கோலில் தீயை வைத்து தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். சாகும்போது அந்த குடும்பத்திற்கு சாபமிட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் சீவலப்பேரி சுடலை முன் சத்தியம் செய்ய, அந்த குடும்பத்தை அழைத்தனர். அவர்கள் சாமிக்கு பயப்படவில்லை.
இதனால் அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர். (காவல் நிலையம் வந்த நேரம்) சுவாமிக்கு பயப்படாதவர்கள் போலீசுக்கு பயந்தனர். அதனால் அந்த ஊரை காலி செய்து விட்டு வீரகுமார சுவாமியும், அவரது பிள்ளைகளும் தனது சொத்துக்களையும், நிலபுலன்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை பெற்றுக் கொண்டு திசையன்விளையில் சில இடங்களை வாங்கினார்கள். அவர்கள் அம்மன் கோவிலுக்கு வடகிழக்கில் குடியேறினார்கள். நில புலன்களும், பணமும் அதிகமாக இருந்ததால் ஆவணங்குடி இருப்போர் என்ற பெயர் பெற்றனர். சில வருடங்களில் சீவலப்பேரி சுடலை சுவாமி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
இதனால் அந்த குடும்பத்தினர் சுடலை பெருமாள் நாடாரை பூசாரியாக்கி ஒரு கல்லை சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தனர். இருப்பினும் சுவாமி தொந்தரவு செய்து வந்தார். ஆவணங்குடியிருப்போர் குடும்பத்தினர் மற்றும் வகையறாக்களும் அந்த இடத்தை காலி செய்து விட்டு திருச்செந்தூர் செல்லும் சாலையில் வீடு கட்டி வசித்து வந்தனர். அவர்கள் வசித்த காலத்தில் முதலில் வழிபட்ட ஆவணங்குடிபகுதி கோவிலில் இருந்து எடுத்து வந்த கல்லை சுவாமி என வழிபட்டனர். நாளடைவில் அது அழிந்துவிட்டது.
இதற்கிடையில் வடபகுதியில் உள்ள ஒருவர், நான் சீவலப்பேரி வந்திருக்கிறேன்... எனக்கு ஆவணங்குடியிருப்போர் வகையறாக்கள் வடபகுதியில் நிலையமிட்டு தந்தால் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வேன்... என்று சாமி ஆடி கூறினார். அங்குள்ளவர்கள் அவரை பைத்தியம், கிறுக்கன் என்று கூறி கிண்டல் அடித்து பேசினர். அந்த சமயத்தில் கிறிஸ்தவ மதம் வந்த நேரம். திசையன்விளையில் சின்ன பண்டாரம், பெரிய பண்டாரம் என இரு அண்ணன் தம்பிகள் குடும்பத்தினரும், மற்ற குடும்பத்தினரும் சேர்ந்து 40 வீடுகள் இருந்தன. இதில் சிலர் கிறிஸ்தவர்களாக மாறினர். மற்றவர்கள் இந்துக்களாகவே இருந்தனர். இந்து - கிறிஸ்தவர் என்ற பிரிவு இருந்தலும் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். இந்நிலையில் திசையன்விளையில் காலரா..............
பரவியதால் சிலர் இறந்தனர். இதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டது. தெய்வம் என்று கூறி சாமியாடிய அந்த நபரிடம் சாமி என்ன சொல்கிறாய்..... இந்த காலராவுக்கு ஒரு பதில் சொல்....என்று கேட்டனர். அவரும் சாமி ஆடி, எனக்கு ஆவணங்குடியிருப்பின் தென்பகுதியில் நிலையமிட்ட இடத்தில், மக்களுக்கு தர்மம் செய்து அவ்விடத்தை தர்மபிறையாக்கி விட்டு எனக்கு வடபகுதியில் நிலையமிட்டு வணங்குங்கள் ... காலரா காணாமல் போய்விடும் என்று கூறினார்.
அவர்களும் சம்மதித்தனர். கலராவும் நின்றுவிட்டது.பொதுமக்கள் அனைவரும் ஆவணங்குடியிருப்போரிடம் பேசி, சாமி ஆடி கூறியதை தெரிவித்தனர். அவர்களும் வடபகுதியை நிலையமிட சம்மதித்தனர். பின்னர் சாமி கேட்ட இடத்தில் மண்ணால் பீடமிட்டு, முள் செடிகளை அகற்றி, பொங்கலிட்டு கொடை நடத்தினர். சில நாட்களில் ஓலையால் குடிசை கட்டி தீபம் இட்டு வந்தனர். சுவாமியின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. சுவாமி இருக்கும் இடம் திசையன்விளை முத்து நாயகம் மற்றும் ராமசாமிக்கு உள்ளதால், தங்களிடம் கேட்காமல் கோயில் கட்டியது அவர்களுக்கு பிடிக்கவில்லை . தனது நிலத்தை ஆக்கிரமித்து கொள்வார்கள் என நினைத்து அதை அகற்றி விட முடிவு செய்தனர். இதை தெய்வம் என ஆடியவர், இந்த விவகாரத்தை கூறினார். மக்கள் இதனால் மிகவும்வருத்தமடைந்தனர். சுவாமிக்கு தண்ணீரில் தீபம் ஏற்றி கும்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் தெய்வமாக ஆடியவர் மீது உள்ள சாமி தனக்கு வரவேண்டும் என நினைத்து குமாரசாமி குடும்பத்தினர் ஒருவர் வைத்தியரிடம் சென்று தகடு கட்டி சாமியாடியிருக்கிறார். அதனால் 3 நாட்களில் அவர் இறந்துவிட்டார். அந்த குடும்பம் சிதறிப்போனது. அந்த குடும்பம் இன்றும் உள்ளது. இந்த நிலையில் பெரியம்மை நோயும் பரவியது. அதை தெய்வமாக சாமியாடியவர் தடுத்து நிறுத்தினார். ஞானப்பிரகாசம் குடும்பத்தில் பல அதிசயங்களை சுவாமி நிகழ்த்தினார். அந்த குடும்பத்தில் சிலர் இன்னும் கிறிஸ்த்துவர்களாகவே இருக்கின்றனர். ஞானப்பிரகாசம் மகன் யோவானை ஆவணங்குடியிருப்போர் மகளை திருமணம் செய்தனர்.
கோவில் சிறப்பு நாளுக்கு நாள் பெருகியது. கோவில் சிறப்பை கண்டு சிலர் பொறாமை கொண்டு, தாவீது என்பவரையும், ஆளடியார் என்பவரையும் சரிக்கட்டி கோவிலை அப்புறப்படுத்த கேரளாவில் இருந்து வைத்தியரை வரவழைத்து பூஜைபோட்டு இரவோடு இரவாக தீயிட்டு கொளுத்தினர். கோவிலும், சிலையும் தீயில் கருகியது.
இந்த நிலையில் சுவாமி ஆவணங்குடியிருப்போர் கனவில் தோன்றி எண்ணெய் தீபம் போட சொல்லியது . கோவிலுக்கு செல்ல முடியாதவாறு முள் செடிகளை வெட்டி போட்டு பாதையை எதிர்தரப்பினர் அடைத்தனர். கோவிலுக்கு சென்ற ஆவணங்குடியிருப்போர் முள் மீது விழுந்து காயமடைந்தனர். வீரகுமாரசாமி மறைந்துவிட்டார். அவரது குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது. பின்னர் திருமால் பூஜை நடத்தினர். அப்போது செண்பகப்பெருமாள் மரணமடைந்தார்.
பின்னர் கோட்டைக்கண் நாடார் தலைமையில், கொடைவிழா நடைபெற்றது. கோவிலுக்கு ஸ்ரீசுடலைஆண்டவர் என பெயர் மாற்றப்பட்டது. பிறகு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த தானியேல் என்பவருக்கு சாமிவந்தது. அவரும் தொடர்ந்து ஆடினார். நாளடைவில் அவர் கீழே விழுந்து மரணமடைந்தார். அதன் பிறகு கொடை நடத்தியவர்கள் பால்குடம், கரகம், மேளம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். கோவிலுக்கு தீ வைத்தவர்கள் சின்னாபின்னம் ஆனார்கள். நாளடைவில் புதிய சிலை மற்றும் கட்டிடம் கட்டப்பட்டது . நன்கொடையும் வசூலித்தனர். வர வர கோவில் நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது.
Credit: www.sudalaiandavar.com